Saturday, 31 December 2011

மனங்கனிந்த 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


எனது இணைய நண்பர்கள் / தோழிகள், தமிழ்நாடு குறுஞ்செய்திக் கவிஞர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த  2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


அன்புடன்....
- கு. தமயந்தி

Wednesday, 28 December 2011

தாய்

கருவறையில் என்னை வைத்து காத்திட்ட அன்னை ..
உயிர்கொண்ட உடல்போல காக்கிறாளே என்னை..
கத்தும்கடல் முத்தைப்போல 

என்நிழல்வாழ்வின் நிஜமாக நீ வந்தாய்...
முத்தமிட்டு கன்னத்திலே என்முகவரியை நீ தந்தாய்...
பாராட்டி,சீராட்டி பார்த்து பார்த்து நீராட்டி 

 பூச்சூட்டி பொட்டு வைத்து
வான்நிலவை நீ காட்டி கதைசொல்லி நீ வளர்த்தாய்...
என்பேர்சொல்லி பள்ளியிலே கைதட்டும்சேதியெல்லாம் உன்செவியினிலே சேர்ந்தபின்னே 

பெற்ற வயிறுகுளிர அன்று தானே நீ சிரித்தாய்.
சுள்ளிகளை பொறுக்கி வந்து சுடசுடவே சோறு ஆக்கி 

பள்ளிவிட்டு நான் வந்தால் பாசம்பொங்க ஊட்டிடுவாய்
சோர்வுற்று நான் இருந்தால் கனிவான உன் வாய்விருந்தால்

 மடிசாய்ந்து தலைகோதி உற்சாகமூட்டிடுவாய் 
 நான்சிந்திய வார்த்தையெல்லாம் சிதறாமல் கோர்த்துவைத்து
அவ்வப்போது சொல்லி சொல்லி உன்ஆயுளை கூட்டிடுவாய்
உன்னை அம்மா என்று அழைத்துதான் என் அழகுதமிழ் பிறந்தது
உன்கரம்பற்றி நடக்கையிலே என்கவலை எல்லாம் பறந்தது
எத்தனையோ உறவுகளில் உன்உறவு விருட்சமாய்
என் வாழ்வெல்லாம் உன்னாலே ஆனது பெரும் வெளிச்சமாய்........





ஆழிப்பேரலை!



சுனாமி !
===========
ஆறாத காயம் தந்த ஆழிப்பேரலையே.......
தீராத அந்தவலி இன்னும் மாறலையே....!
ஆண்டுகள் உருண்டோடி ஆயிரம் ஆனாலும்..
இன்று நடந்ததாய் நம்முன்  நிழலாடும்!
நீ கொண்டுசென்ற உயிர்களைக்
காணாமல் துடித்ததே ஊர் ஜனம்..
கண்டுவர தூதுவிட்டு கண்ணீர்க்குளம் கட்டி,
கரையிலே நிற்கிறதே தினம் தினம்..!
பல்லாயிரம் உயிர்களைக் குடித்தது உன் சினம்...
அதனால் குவிந்ததோ மலைஎன பிணம், பிணம்....!
திட்டம்போட்டு நீ பார்த்திருந்தாய்…உயிர்களை
திரட்டிச் செல்ல  நீ காத்திருந்தாய்..
உறங்கும் வேளையிலே ஊருக்குள் ஏன் புகுந்தாய்?
கண்ணிமைக்கும் நேரத்திலே கயவனாய் ஏன் வந்தாய்?
பால்குடித்து உறங்கிய குழந்தையின்
பால்முகத்தைக் காணாமல்,
தாய் கிடந்து தவிக்கின்றாள்
தாளாத வேதனையால் !    
தரைமீனாய் துடிக்கின்றாள்!
பச்சைக் குழந்தை ஒன்று 
எச்சில் முத்தமிட தாய்முகத்தைத் தேடுது....
காணாத ஏக்கத்திலே உயிர்வற்றி வாடுது.....
கணவனை இழந்த மனைவி கதற,
மனைவியை இழந்த கணவன் பதற,
உடல்களைத் தேடி உறவுகள் சிதற,
நீமட்டும் அமைதியாய் அடங்க,
கண்ணீர் கூக்குரல் ஊரெங்கும் தொடங்க,
உயிரையும், உடமையும் உனதாக்கிக்கொண்டாய்.
இதில்என்ன இன்பம்நீ அன்று கண்டாய்?
கடல்காண வரும்போதெல்லாம் இதயம் திட்டித் தீர்க்கிறது.
அந்த  நாளை நினைத்தால்  மட்டும்
கண்கள் குருதியை வார்க்கிறது.
அறிவியல்கூட உன்னிடம் தோற்றது..
அன்பான உறவுகளை நாங்கள்
எப்போதுதான் மீட்பது?

- கு. தமயந்தி, கள்ளக்குறிச்சி
  (தமிழ்நாடு)






Saturday, 24 December 2011

தமயா கவிதை





வெட்டி விட்டாலும்
விரல் நகம் வளர்கிறது..

முட்டி மோதி
சிறு விதை எழுகிறது..

நாட்கள் தேய்ந்தாலும்
வருடங்கள் வளர்கிறது..

நாம் மட்டும் ஏன்
அறையில் அமர்ந்து
ஆகாயம் பார்க்கிறோம் ?