தானே புயல் தானே என்று தாழிட்டு உள்ளிருந்தேன்.
ஆற்பரித்து அடித்த புயல் ஊரை மெல்ல சிதைத்தது.
வெளிச்சமில்லா நடு இரவில், அச்சத்தில் இதயம் துடித்தது.
இரக்கமில்லா புயல் அரக்கனால் உறக்கமில்லை கண்களுக்கு.
உனை தடுக்க வழி இல்லை, அன்றிரவு எங்களுக்கு.
சுழற்றி அடித்து மிரட்டினாய்.
கிடைத்த பொருளை சுருட்டினாய்.
வெளியில் வந்தால் விரட்டினாய்.
எங்கள் விடியலை நீ புரட்டினாய்.
புத்தாண்டை வரவேற்க புன்னகைத்து காத்திருக்க,எங்கள்
சொத்தை எல்லாம் சீர்குலைக்க எங்கிருந்து நீ வந்தாய்?
சித்தாடை கட்டிக்கொண்டு ஆடிபாடும் வேளையிலே,
சிந்திடும் கண்ணீரோடு சிதறிய உடைமைகளை
தேடும் நிலை நீ தந்தாய்.
துயில்கொள்ளும் வேலையிலே புயலாக நீ வந்தாய்.
எழிலான ஊரையெல்லாம் தலைகீழாய் மாற்றி சென்றாய்.
வறுமையில் வாடிய உறவுகளை நீ கொன்றாய்.
கருமையாய் வாழ்வை மாற்றி
கவலைகளை நீ தந்தாய்.
நீ ஆடியது பல மணிநேரம்,ஆண்டுகள் ஆனாலும்
இறக்க முடியாத பாரம்.
இழப்புகளை காண இரவு மெல்ல விடிந்தது.
வரமான மரங்கள் எல்லாம் மண்ணிலே ஒடிந்தது
வயல்,வீடு,தோட்டமெல்லாம் வசந்தத்தை இழந்தது.
சொல்லாத சோகமெல்லாம் முகத்தினில் தெரிந்தது.
வரும்காலம் ஏசும்படி உன் செயல் அமைந்தது.
உயிர்களையும், உடைமைகளையும் இழந்துவிட்டு,
வீதியிலே நிற்கின்றோம் வாழ்வை கேட்டு.
இயற்கையே எங்கள் மீது இரக்கம் காட்டு.
வேதனையை வேரோடு தூர ஓட்டு.
கோபத்தை காட்டியதால் மாறியது எங்கள் கோலம்.
மாற்றுமா வேதனையை இனிவரும் எதிர்காலம்?
ஆற்ற ஆளின்றி அல்லலில் இன்று.
நம்பிக்கை கரம் கொண்டு நாங்கள்
கரை சேருவது என்று?
'தானே' புயல்கொடுமையை மக்கள் அனுபவித்த செய்திகளைப் படித்து வேதனைப்பட்ட உள்ளம், இந்தக் கவிதையின் வரிகளையும் படித்து, மேலும் வேதனையின் உச்சிக்கேப் போய்விட்டது!
ReplyDelete- கிரிஜா மணாளன்