இன்பசுகங்களையும், துன்பசுமைகளையும்
அடக்கி வைத்திருக்கும் ஆழிப்பேரலை.
வெள்ளமென கனவை சுமந்த இரு உள்ளங்களை
கட்டிப்போடும் அதிசய மாயவலை.
உணர்வுகளை மாற்றி,உலகத்தின் அழகைகூட்டிவிடும்.
உள்ளம் அவள் நினைவால் செல்லரித்து காட்டுத்தீயாய் சுடும்.
சுவர் எழுப்பி தடுத்தாலும் சுக்குணூறாய் நொறுங்கிவிடும்.
பார்வைபடும் இடமெல்லாம் அவள் வதனமுகம் மட்டும் வந்துபோகும்.
அவளை பார்க்காத நேரத்தில் உடல்தீயாய் வெந்து போகும்.
காற்றும் நுழையாத இடத்தில் நொடிக்குள் படரும் கொடி அவள்.
வாட்டும் இரவுப்பொழுதில் எனைத்தாங்கும் மடி அவள்.
அவள் அருகில் இருந்தால் பேச்சுவராது.
அவள் தொலைவில் மறைந்தால் மூச்சே இராது.
கடலில் நடக்கவும் காற்றில் மிதக்கவும் கற்றுத்தரும்.
புதுஒரு உலகத்தில் புகுந்தது போன்ற உணர்வு வரும்.
அவள் இதழ் உதிக்கும் வார்த்தையெல்லாம்,ஒலியும்,ஒளியுமாய்,
இதயக்கணினியில் இருக்கும்.
அவ்வப்போது உயிர்த்தெழுந்து நெருஞ்சியாய் உயிரைத்தைக்கும்.
யாரிடம் பேசினாலும் மனம்மட்டும் அவளிடம் புள்ளியில் சிக்கிய கோலமாய்........
நேரத்தை கடந்து அவளிடம் பேசிட அலைபேசி எங்களுக்கு பாலமாய்....
அடிக்கடி தலைவாரி அழகுபார்க்கிறேன்.
நான் கண்ணாடி முன்னாடி நின்று சிரிக்கிறன்.
கதிரவன் வந்தும் கண்விழிக்காத நான் வைகரையில் எழுந்து அவள் வாசலில் நிற்கிறேன்.
சுழலும் மின் விசிறியாய் மனம் அவளை சுற்றியே சுழலுது....
பூசனிகொடிபோல் அவள் வாசலை தேடியே படருது....
கத்தும் கடல்போல் உள்ளம் அடிக்குது.
சித்தம் கெட்டு சிலநேரம் வெடிக்குது.
காதல் அரும்பு இதயத்தில் பூத்துவிட்டால்,உறக்கம் நம்மை உதறிவிடும்.
தனிமையில் இதயம் கதறியழும்.
மௌனம் மட்டும் மணிக்கனக்காய் பேசும்.
அவள் சுவாசமே உயிர் காற்றாய் வீசும்.
தானே புயலாய் புரட்டிப்போடும்,அவள் காதல் தானே!
ஏனோ தெரியவில்லை அவளாகிப்போனேன் நானே!
No comments:
Post a Comment